புதுடெல்லி: இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில், மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பை வாய்ப் புற்றுநோய் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.
மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி-HPV) தொற்றால் ஏற்படும் இப்பிரச்சினையைத் தொடக்க நிலையிலேயே தடுக்க, சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியமான தடுப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்தப் பின்னணியில், கடந்த பிப்ரவரி மாதம் நாடு தழுவிய இலவச ‘ஹெச்பிவி’ தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ், பெற்றோரின் ஒப்புதலுடன் 14 வயது சிறுமிகளுக்கு அரசு சுகாதார நிலையங்களில் இலவசமாக ஒருமுறை செலுத்தப்படும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி முன்பதிவு, கண்காணிப்புப் பணிகள் ‘யு-வின்’ (U-WIN) மின்னிலக்கத் தளம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு முயற்சிகளில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஏறக்குறைய 1.2 கோடி சிறுமிகளை இலக்காகக் கொண்ட இந்த இயக்கம், தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களிலேயே ஒரு கோடி சிறுமிகளுக்கு ‘ஹெச்பிவி’ தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் தடுப்புச் சுகாதாரச் சேவைகளின் விரிவாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
மாநில அளவிலான செயல்பாடுகளில் குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய ஆறு மாநிலங்கள் 100 விழுக்காடு இலக்கை எட்டியுள்ளன.
அசாம் (95.63%), தெலுங்கானா (95.28%), கர்நாடகா (93.16%), உத்தராகண்ட் (90.17%) ஆகிய மாநிலங்களும் முன்னிலையில் உள்ளன.
தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் (29.33 லட்சம்) முதலிடத்திலும் பீகார் (13.70 லட்சம்), குஜராத் (7.75 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
