புதுடெல்லி: ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பில் அந்நாட்டுடன் இந்தியா பத்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதனையடுத்து, ஈரானுடன் வணிக உறவுகொள்ளும் எந்த ஒரு நாட்டின்மீதும் பொருளியல் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள சபஹர் துறைமுகம், ஈரானுக்கு உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அத்துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா, ஈரானுடன் உடன்பாடு செய்துகொண்டது.
இந்நிலையில், அதன் தொடர்பில் திங்கட்கிழமையன்று (மே 13) இருநாடுகளுக்கு இடையே நீண்டகால ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்நிகழ்வை ‘இந்தியா - ஈரான் உறவில் வரலாற்றுப்பூர்வமான தருணம்’ என்று இந்தியக் கப்பல்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இது அமெரிக்காவிற்கு மகிழ்ச்சி அளித்ததுபோல் தெரியவில்லை. கடந்த மூவாண்டுகளில் ஈரான் தொடர்புடைய நிறுவனங்கள்மீது அமெரிக்கா 600க்கும் மேற்பட்ட பொருளியல் தடைகளை விதித்துள்ளது.
இதனிடையே, இந்தியா - ஈரான் உடன்பாடு தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணைப் பேச்சாளர் வேதாந்த் பட்டேலிடம் கேட்டதற்கு, ஈரான்மீதான அமெரிக்கத் தடைகள் இன்னும் நடப்பில் உள்ளன என்றும் அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“ஈரானுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், தனிமனிதராக இருந்தாலும், அமெரிக்கா பொருளியல் தடைகள் விதிப்பதற்கு சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்று திரு பட்டேல் தெரிவித்தார்.
அவரது இக்கூற்றுக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சபஹர் துறைமுகத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது. ஆப்கானிஸ்தானும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இந்தியா தனது பொருள்களைக் கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக அத்துறைமுகம் விளங்கி வருகிறது.
சபஹர் துறைமுகம் வாயிலாக இதுவரை 2.5 மில்லியன் டன் கோதுமையும் 2,000 டன் பருப்புவகைகளும் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபஹர் துறைமுகம் தொடர்பில் இந்தியாவும் ஈரானும் செய்துகொண்ட உடன்பாடானது, அத்துறைமுகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.