புதுடெல்லி: நடைப்பயிற்சிக்குச் சென்றபோது தனது நான்கு பவுன் தங்கச்சங்கிலியை அடையாளம் தெரியாத இருவர் பறித்துச் சென்றது தொடர்பாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், டெல்லியில் தங்கியுள்ள சுதா, ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும் என சுதா எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், சங்கிலிப் பறிப்பின்போது தமது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். டெல்லியை பெண் முதல்வர் ஆளும் நிலையில், இங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை,” என்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார் எம்.பி. சுதா.