அமராவதி: உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்துவரும் நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்கள்தொகை மூப்படைவது அதிகரித்து வருகிறது.
இளைய தலைமுறையினர் நாட்டின் வேறு பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது என்றும் அதனால் பல மாவட்டங்களில் முதியவர்களே அதிகமுள்ளனர் என்றும் திரு நாயுடு கூறினார்.
“ஆந்திராவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் உள்ள ஏராளமான சிற்றூர்களில் முதியோரை விட்டுவிட்டு இளைய தலைமுறையினர் நகரங்களுக்குச் சென்றுவிட்டனர்,” என்றார் அவர்.
ஆந்திர மாநிலத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் 1.6 விழுக்காடு குறைந்துவிட்டதாக அவர் சுட்டினார்.
இந்தியாவில் 1950களில் 6.2 விழுக்காடாக இருந்த மக்கள்தொகைப் பெருக்கம், 2021ல் 2.1 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
“இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாகப் பெற்றுக்கொள்வதால் இளையோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்வது மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கும்,” என்று முதல்வர் நாயுடு தெரிவித்தார்.
ஜப்பான், சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மூப்படையும் மக்கள்தொகையின் விளைவுகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், “அதிகமாகக் குழந்தை பெற்றுக்கொள்வோருக்குச் சலுகைகள் வழங்குவது குறித்து சிந்தித்து வருகிறோம். இரண்டு பிள்ளைகளுக்குமேல் உள்ளோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிவிட்டோம். இரு பிள்ளைகளுக்குமேல் இருப்போரே அத்தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டத்தைக் கொண்டுவரவுள்ளோம்,” என்று திரு நாயுடு தெரிவித்துள்ளார்.