தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு: ஆந்திர முதல்வர் குற்றச்சாட்டு

2 mins read
கோவிலில் சத்தியம் செய்ய தயார், முதல்வர் தயாரா: எதிர்க்கட்சி எம்.பி. சவால்
03c834fc-7737-4dde-887d-2b8a9926f895
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, இப்போது சுத்தமான நெய் பயன்படுத்தப்படுவதால் லட்டின் தரம் மேம்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படங்கள்: ஊடகம்

அமராவதி: முந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு செய்வதற்கு நெய்க்குப் பதில் விலங்குக் கொழுப்பும் தரம் குறைந்த பொருள்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இப்போது, கோவிலில் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, சுத்தமான நெய் பயன்படுத்தப்படுவதால் லட்டின் தரம் மேம்பட்டுள்ளதாகத் திரு நாயுடு கூறினார்.

அமராவதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் நாயுடுவின் மகனும் ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான நர லோகேஷ், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்திய ஆட்சியைக் கடுமையாகச் சாடினார்.

“நம்முடைய மிகவும் புனிதமான கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். கடந்த ஆட்சியின்போது அங்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க நெய்க்குப் பதில் விலங்குக் கொழுப்புப் பயன்படுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்,” என்று எக்ஸ் சமூக ஊடகம் வழியாக அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தீய எண்ணத்துடன் முதல்வர் நாயுடு தங்கள்மீது குற்றம் சுமத்தியுள்ளார் என்றும் அரசியல் லாபத்திற்காக அவர் எந்த நிலைக்கும் கீழிறங்குவார் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.

தமது குற்றச்சாட்டின்மூலம் முதல்வர் நாயுடு திருப்பதி கோவிலின் புனிதத்தன்மையையும் கோடானுகோடி இந்துக்களின் நம்பிக்கையையும் பெரிதும் களங்கப்படுத்திவிட்டார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

இத்தகைய சொற்களை அல்லது இத்தகைய குற்றச்சாட்டுகளை எந்த ஒரு மனிதரும் பயன்படுத்த மாட்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தானும் தன் குடும்பத்தினரும் திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் சத்தியம் செய்யத்தயார் என்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி, முதல்வர் நாயுடு அவ்வாறு செய்ய தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.

இதனிடையே, முதல்வர் நாயுடுவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ள திருப்பதி கோவில் அறக்கட்டளை, இதன் தொடர்பில் அரசாங்கத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்