சிங்கப்பூரில் ஆந்திர முதல்வர்; கூடுதல் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

சிங்கப்பூரில் ஆந்திர முதல்வர்; கூடுதல் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

2 mins read
7d7721bc-ac25-4316-8573-f9e5bff13b19
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலேவுடன் (இடது) ஆலோசனை நடத்திய ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: சந்திரபாபு நாயுடு/ஃபேஸ்புக்
multi-img1 of 2

அமராவதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலேவைத் திங்கட்கிழமையன்று (ஜூன் 15) சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது முதலீடு, தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தித் துறை, எந்திரனியல், மருத்துவச் சாதனங்கள் தயாரிப்பு, கல்வி, புத்தாக்கம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஆந்திர மாநிலத்துடன் சிங்கப்பூர் கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்துதல், அதிநவீனத் துறைகளில் புதிய கூட்டுமுயற்சிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்த விவாதம் அமைந்ததாகத் திரு சந்திரபாபு நாயுடு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

மேலும், ஆந்திராவின் இயற்கை வேளாண்மைத்துறை முன்னேற்றம், உலகத் தரம் வாய்ந்த வேளாண், தோட்டக்கலை ஏற்றுமதி, விமானப் பராமரிப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைகளில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிதாக அமைக்கப்படும் வர்த்தகங்களில் முதலீடு செய்பவர்களையும் திரு சந்திரபாபு நாயுடு சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய கண்டுபிடிப்புகளை வெற்றிகரமான தொழிலாக மாற்றுவதில் புதிதாக அமைக்கப்படும் வர்த்தகங்களில் முதலீடு செய்பவர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆந்திராவில் புதிதாக அமைக்கப்படும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ‘ரத்தன் டாட்டா புத்தாக்க மையம்’ போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு தொழில்முனைவர்’ என்ற இலக்குடனும் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை அதிவேகப்படுத்துவதிலும் ஆந்திரா தீவிரமாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய திரு சந்திரபாபு நாயுடு, மாநிலத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் தங்களது முதலீடுகள் மூலம் பங்காளிகளாக இணையுமாறு சிங்கப்பூர் முதலீட்டாளர் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சந்திரபாபு நாயுடுசிங்கப்பூர்முதலீடுஒத்துழைப்புதூதர்