அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச எரிவாயு கலன் வழங்கும் திட்டத்தை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச எரிவாயு கலன் வழங்கும் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது.
இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதை அடுத்து அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘தீபம்-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அதாவது ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு கலன்களைப் பயனாளர்களுக்கு வழங்க அம்மாநில அரசு முன்வந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் நடைபெற்ற இலவச எரிவாயு கலன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர், பயனாளி ஒருவரின் வீட்டில் இலவச எரிவாயு கலனை இணைத்து தேநீர் செய்து அருந்தி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் திரு சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார்.