நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை உறுதிசெய்த ‘சந்திரயான் 3’

1 mins read
4eee2f1b-e980-4e6b-830d-35ca058346b4
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான்-3 விண்கலம் உறுதிசெய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான் 3’ விண்கலனைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக இந்தியா விண்ணில் பாய்ச்சியது. இந்த விண்கலனிலிருந்து வந்த ‘லேண்டர்’ கருவி, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், நிலவில் உறைந்த நிலையில் பனிப்படிவுகள் இருப்பதை ‘சந்திரயான் 3’ உறுதிசெய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, அதிக ‘எலக்ட்ரான்’ அடர்த்தி இருப்பதும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பிளாஸ்மா இயக்கவியலில், சந்திரனின் மேலோட்டுப் பகுதியில் காந்தப்புலங்களின் அதிகப்படியான பங்கைக் குறிக்கிறது.

சந்திரனில், ஒரு கன சென்டிமீட்டருக்கு சுமார் 23,000 ‘எலக்ட்ரான்’கள் என வியக்கத்தக்க உயர் ‘எலக்ட்ரான்’ அடர்த்தியை வெளிப்படுத்துகிறது. இது சூரிய ஒளிப் பக்கத்தில் உள்ளதைவிட கிட்டதட்ட 100 மடங்கு அதிகம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வருங்கால சந்திர ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்