புதுடெல்லி: சந்திரயான்-5 திட்டத்துக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை இந்தியாவும் ஐப்பானும் இணைந்து மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நிலவு துருவ ஆய்வுத் திட்டம் (லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.
இரு நாடுகளின் கூட்டுத் திட்டத்தின்கீழ், ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையம், ரோவர் எனப்படும் நிலவில் சுற்றி ஆய்வு மேற்கொள்ளக்கூடிய வாகனத்தைத் தயாரிக்கும்.
இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், விண்கலனை நிலவில் தரையிறக்க உதவும் லேண்டரைத் தயாரிக்கும் எனக் கூறப்பட்டது.
கடந்த ஓராண்டாக லேண்டர், ரோவருக்கான வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் திரு சோம்நாத் கூறினார்.
“சந்திரயான்-5 திட்டத்தில் அதிக சக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டர், ரோவரைப் பயன்படுத்த உள்ளோம். இது நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடித் திட்டமாகும்,” என்றார் அவர்.
“நிலவில் தண்ணீர் இருக்கிறதா, என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பது குறித்து லூபெக்ஸ் திட்டத்தின் மூலம் ஆய்வு செய்யப்படும்,” என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
2008ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் நிலவை 312 நாள்கள் சுற்றியது. நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை அது கண்டுபிடித்தது.
பின்னர் 2019ல் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் மோதி விபத்துக்குள்ளானதில் லேண்டரும் ரோவரும் சேதமடைந்தன. எனினும் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வட்டமடித்து ஆய்வு செய்தது.
2023ஆம் ஆண்டு சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
அடுத்த கட்டமாக சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 18ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் வரும் 2027ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நிலவில் இருந்து மூன்று கிலோ அளவுக்கு கனிமங்களை இந்தியாவுக்கு எடுத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது.