2026ல் இந்திய வேலைச் சந்தையில் மாற்றம்: சுகாதாரத் துறையை நாடும் இளையர்கள்

2026ல் இந்திய வேலைச் சந்தையில் மாற்றம்: சுகாதாரத் துறையை நாடும் இளையர்கள்

2 mins read
f72c6d21-2b45-46e5-97f5-35f340f1bf14
தகவல் தொழில்நுட்பப் பணி ஒரு பாதுகாப்பான வாழ்க்கைத் தொழில் எனும் வாக்குறுதி ஒரு கசப்பான யதார்த்தத்தை எதிர்கொள்கிறது. - படம்: பிக்சல்ஸ்

புதுடெல்லி: 2026ஆம் ஆண்டில் இந்திய வேலைச் சந்தை பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையை விட சுகாதாரம், உள்கட்டமைப்பு, தலைமைத்துவம், நிபுணத்துவத் திறன் சார்ந்த பணிகள் அதிக நிலைத்தன்மையும் வளர்ச்சியும் கொண்டவையாக உருவெடுத்துள்ளதாக ‘இண்டீட்’ (Indeed) நிறுவனம் வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கானச் சிறந்த வேலைகள் அறிக்கை தெரிவிக்கிறது.

உத்தரவாதமில்லாத தகவல் தொழில்நுட்பப் பணி

பல ஆண்டுகளாகப் பெருவாரியான இந்தியர்களின் வாழ்க்கைத்தொழில் கனவாகத் தகவல் தொழில்நுட்ப வேலை இருந்தது. பொறியியல் என்ற ஒற்றைத் துறை மட்டுமே ஒரு தலைமுறையின் வெற்றியைத் தீர்மானித்தது.

ஆனால், அந்நிலை தற்போது மாறி வருகிறது. இண்டீட் இந்தியாவின் அண்மைய 2026ஆம் ஆண்டுக்கான வேலை தரவரிசைப் பட்டியலில், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தலைமைத்துவம் உள்ளிட்ட வேலைகள் தகவல் தொழில்நுட்பப் பணிகளை விஞ்சி வருகின்றன. அதற்கு அத்துறையில் நிலவும் உத்தரவாதமில்லாத பணி நிலையே காரணம் எனக் கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பப் பணி ஒரு பாதுகாப்பான வாழ்க்கைத் தொழில் எனும் வாக்குறுதி ஒரு கசப்பான யதார்த்தத்தை எதிர்கொள்கிறது. ஒரு காலத்தில் அசைக்க முடியாதவையாகக் கருதப்பட்ட தொழில்நுட்ப பெரு நிறுவனங்களில் நடந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இளையர்கள் மனத்தில் அண்டியிருந்த மாயையைத் தகர்த்தெறிந்துள்ளன.

இந்தியாவின் இலக்குகள் தற்போது வெறும் விசைப்பலகைகள், அலுவலக அறைகள் ஆகியவற்றைத் தாண்டி விரிவடைந்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாக ஒரு வேலையைச் செய்து முடிப்பதைக் காட்டிலும், தலைமைத்துவம், சரியான தீர்மானம் ஆகியவற்றுக்கே தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சிறந்த வேலைகள் தரவரிசை: முதலிடத்தில் சுகாதாரம்

2026ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வேலைகள் தரவரிசையில், சுகாதாரத் துறை முன்னணியில் இருக்கிறது. அதில், சரும நல மருத்துவர்கள் (Dermatologists) முதலிடம் வகிக்கின்றனர்.

அந்த நிபுணத்துவத் துறையில் ஆண்டுக்கு ஆண்டு வேலைவாய்ப்பு விகிதம் வியக்கத்தக்க வகையில் 182 விழுக்காடு அதிகரித்துள்ளது.

நிபுணத்துவ மருத்துவ சிகிச்சைகளுக்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், பெருநகரங்களில் தனியார் மருத்துவமனைகள், மருந்தகம் ஆகியவற்றின் வேகமான விரிவாக்கம் ஆகிய இரு முக்கியப் போக்குகளை அந்த எழுச்சி வெளிப்படுத்துகிறது.

உள்கட்டமைப்பு, தலைமைத்துவப் பணிகள்

சுகாதாரத்திற்கு அடுத்த நிலையில் கட்டடப் பொறியாளர்கள், மூத்த கட்டடக் கலைஞர்கள், கட்டுமான மதிப்பீட்டாளர்கள், நிலச் சொத்து நிபுணர்கள் ஆகிய பணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனது நகரமயமாக்கலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், புதிய நெடுஞ்சாலைகள், பெருவிரைவு வழித்தடங்கள், குடியிருப்பு வளாகங்கள், வணிக மையங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு, வடிவமைத்து, பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய நிபுணர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், தலைமை நிதி அதிகாரி, விற்பனைப் பிரிவுத் தலைவர், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் போன்ற பதவிகள் அந்தப் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்