இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள்: சுவீடன் வணிகத் தலைவர்கள் பாராட்டு

இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள்: சுவீடன் வணிகத் தலைவர்கள் பாராட்டு

1 of 2
படம்: பிஐபி
படம்: பிஐபி

18 May 2026 - 4:26 pm

2 mins read

புதுடெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 17) சுவீடன் சென்றடைந்தார்.

அங்கு நடைபெற்ற தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளின் போது, ​​இருதரப்பு உறவுகளின் முழுப் பரிமாணமும் மீளாய்வு செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2025ஆம் ஆண்டில் 7.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு (AI), வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள், தற்காப்பு, விண்வெளி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனிடையே, சுவீடன் வணிகத் தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் அடங்கிய குழு பிரதமர் மோடியை சந்தித்தது.

அக்குழுவினர், இந்தியா மீது மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும், கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பொருளியல் சீர்திருத்தங்களால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பாராட்டியதாகவும் வெளியுறவு அமைச்சு MEA) தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய வட்டமேசைத் தொழில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிபி ஜார்ஜ், தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் மூத்த தொழில் தலைவர்கள் அண்மைய ஆண்டுகளில் இந்தியாவில் தாங்கள் கண்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை எடுத்துரைத்ததாகக் கூறினார்.

தமது பயணத்தின் முக்கியமான நிகழ்வாக, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பகிரப்பட்ட கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், பிரதமர் மோடியும் சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனும் சிறப்புப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டதாக திரு ஜார்ஜ் மேலும் தெரிவித்தார்.

சுவீடனின் மதிப்புமிக்க ‘ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார்’ (’Royal Order of Polar Star Commander Grand Cross) விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது, ஓர் அரசாங்கத் தலைவருக்கு சுவீடனில் வழங்கப்படக்கூடிய மிக உயர்ந்த கௌரவமாகும்.

இந்தியா, சுவீடன் உறவுகள் மேம்பட ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக கருதுவதாக மோடி கூறினார்.

முன்னதாக, சுவீடன் வான்பரப்புக்குள் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு அந்நாட்டின் போர் விமானங்கள் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கின.

சுவீடன் பிரதமர் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். மேலும், திரு மோடிக்கு அவர் தங்கியிருந்த விடுதியில் வங்காள கலாசாரத்தின்படி பெண்கள் வரவேற்பளித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சுவீடன்பிரதமர்நரேந்திர மோடிபயணம்பேச்சுவார்த்தைவிருது