புதுடெல்லி: இந்திய நாட்டவர்க்கான கடப்பிதழ் விதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சு சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது
1980ஆம் ஆண்டின் கடப்பிதழ் விதிகள் திருத்தப்பட்டு, ‘கடப்பிதழ்கள் (திருத்த) விதிகள், 2026’ வியாழக்கிழமை (செப்டம்பர் 17) இந்திய அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு நடப்புக்கு வந்துள்ளது.
புதிய விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்க சாதாரண கடப்பிதழ், அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது அக்குழந்தை 18 வயதை அடையும்வரை என இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை மட்டுமே செல்லுபடியாகும்.
உதாரணமாக, ஒரு குழந்தைக்கு கடப்பிதழ் வழங்கி ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் 18 வயது பூர்த்தியாகிவிட்டால், அக்கடப்பிதழ் செல்லுபடியற்றதாகிவிடும். பின்னர் அவர் வயது வந்தோருக்கான புதிய கடப்பிதழுக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. புதிய கட்டண முறை 2026 ஜூலை 1 முதல் நடப்புக்கு வந்தது.
அதன்படி, 36 பக்கக் கடப்பிதழுக்குச் சாதாரண சேவையில் ரூ.2,500, ‘தட்கால்’ சேவையில் ரு.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60 பக்கக் கடப்பிதழுக்கு முறையே ரூ.3,500, ரூ.6,000 வசூலிக்கப்படும்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சாதாரண சேவையில் ரூ1,750, தட்காலில் ரூ.4,250 கட்டணமாகும். கடப்பிதழ் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ புதிய கடப்பிதழ் பெறப் பெரியவர்களுக்கு ரூ5,000 முதல் ரூ7,500 வரையிலும், சிறுவர்க்கு ரூ.4,250 முதல் ரூ.6,750 வரையிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எட்டு வயது வரையிலான குழந்தைகள், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் புதிய கடப்பிதழ் விண்ணப்பங்களுக்கு 10 விழுக்காடு கட்டணச் சலுகை தொடர்கிறது.
15 முதல் 18 வயது வரையிலானவர்கள் விருப்பப்பட்டால் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பெரியவர்களுக்கான கடப்பிதழைத் தேர்வு செய்யலாம். காவல்துறை சான்றிதழ் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போலி இணையத்தளங்களை நம்பாமல், அதிகாரபூர்வ ‘பாஸ்போர்ட் சேவா’ இணையத்தளத்தை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
