காற்பந்து வீரர் மெஸ்ஸியின் கோல்கத்தா நிகழ்ச்சியில் குழப்பம்; ஏற்பாட்டாளர் கைது

2 mins read
6a684749-49d7-4eac-9396-5b4a8aea0e78
டிசம்பர் 13ஆம் தேதி நாற்காலிகளை வீசியெறிந்து கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்களை அடக்க காவல்துறையினர் படாத பாடுபட்டனர். அதிரடிப் படை வரவழைக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: கோல்கத்தா மெஸ்ஸி நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட வழக்கில் கைதான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் பிதான்நகர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது அவரது பிணை மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை 14 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

உலகப் புகழ்பெற்ற காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு ரசிகர்கள் ஆத்திரமடைந்து நாற்காலிகளை உடைத்து, பதாகைகளை கிழித்தெறிந்து, தண்ணீர்ப் போத்தல்களை மைதானத்தில் வீசி எறிந்தனர். இதையடுத்து ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.

மூன்று நாள் இந்தியப் பயணமாக மெஸ்ஸி சனிக்கிழமை கோல்கத்தா வந்தார்.

கோல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அவர் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான ரசிகர்கள் ரூ4,500 முதல் ரூ10,000 வரை கொடுத்து நுழைவுச் சீட்டுகளை வாங்கி மைதானத்தில் ஆவலாகக் கூடியிருந்தனர்.

மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணியின் இதர சில வீரர்கள் புடைசூழ மைதானத்தில் நுழைந்தார். சிறிது தூரம் நடந்துசென்று அரங்கில் கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்.

ஆனால், முக்கியப் பிரமுகர்கள், ஏற்பாட்டாளர்கள், பிரபலங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துகொண்டதால் ரசிகர்களால் அவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.

மேலும், மெஸ்ஸி மைதானத்தை சுற்றி வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதற்கிடையே திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பே அவர் மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதால் ரசிகர்களின் ஆத்திரம் உச்சத்திற்குச் சென்றது.

ஆவேசமடைந்த ரசிகர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளையும் குடிநீர் போத்தல்களையும் மைதானத்தை நோக்கி வீசினர். ஒரு பகுதியினர் தடுப்புகளை உடைத்து மைதானத்திற்குள் புகுந்து நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறு மேடை, பந்தல்களை அடித்து நொறுக்கினர்.

காவல்துறையினர், ரசிகர்களை மைதானத்திலிருந்து வெளியேறுமாறு எச்சரித்தனர்.

ஆனால், ரசிகர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை அடக்க முடியாமல் திணறி, அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

“மெஸ்ஸியைப் பார்க்கவே வந்தோம். குடிநீர் வசதிகூட சரியாகச் செய்யப்படவில்லை,” என்று ரசிகர்கள் சிலர் நொந்துகொண்டனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். ரசிகர்களுக்கு நுழைவுச் சீட்டு கட்டணத்தைத் தர அவர் உறுதியளித்துள்ளதாக காவல்துறை டிஜிபி ராஜீவ் குமார் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிரவாகச் சீர்கேட்டால் அதிர்ச்சியடைவதாகக் கூறிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோல்கத்தா சால்ட் மைதானத்தில் லயனல் மெஸ்ஸி.
கோல்கத்தா சால்ட் மைதானத்தில் லயனல் மெஸ்ஸி. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்