தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையம் நான்கு முனையங்களாக விரிவடைகிறது

2 mins read
அதிநவீன வசதிகள் நிறைந்த புதிய முனையத்தை 2026 மார்ச்சில் திறக்க இலக்கு
7715f4c1-290d-4794-b03e-35b3f91344b2
சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளைப் பார்வையிட இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் சென்னை சென்றனர். 

புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளை ஆணையத் தலைவர் விபின் குமார் தலைமையிலான குழு பார்வையிட்டது.

ஏறத்தாழ நூறாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்று வரும் பணிகளை முடிக்க 2026 மார்ச் மாதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, அதே காலகட்டத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளின் மதிப்பீடு ரூ.1,207 கோடி (S$180.4 மில்லியன்).

புதிய முனையத்தில் அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் எட்டு நுழைவாயில்களும் 60 பயணச்சீட்டு முகப்புகளும் இருக்கும்.

அவற்றுடன் எட்டு விமான இணைப்புகள் (aerobridges), நவீன பயணப்பெட்டி சேகரிப்பு சுற்றுப்பாதையும் தானியக்க வருடிகளும் இடம்பெறும். பயணிகளின் வசதிக்காகவும் மேம்பாட்டு பாதுகாப்புக்காகவும் அவை நிறுவப்படுகின்றன.

2026 மார்ச் மாதம் புதிய முனையம் தயாரான பின்னர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் நான்கு முனையங்கள் இருக்கும்.

அவற்றின் வாயிலாக ஆண்டுக்கு 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள முடியும்.

நாள் ஒன்றுக்கு 500 விமானச் சேவைகளைக் கையாளும் ஆற்றலை அந்த நான்கு முனையங்களும் பெறும்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பத்தாண்டுகளில் பல மில்லியன் அதிகரித்து உள்ளது.

2015ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 22 மில்லியனாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 35 மில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதால் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் எழுந்தது.

அதன் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு விரிவாக்கப் பணிகள் அறிவிக்கப்பட்டன.

கொவிட்-19 பெருந்தொற்றால் தாமதமடைந்த முதற்கட்டப் பணிகளை, 2023 ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குறிப்புச் சொற்கள்