திருமலை: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, சென்னையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கவுள்ளார்.
இதன் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி கோவில் நிர்வாக வரலாற்றில், தனிநபர் ஒருவரால் சுவாமிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தங்கக் காணிக்கை இதுவாகும் எனக் கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பது தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ள 43 வகையான தங்க ஆபரணங்களில், ஏழுமலையானுக்கான கிரீடம், திருவடிப் பாதங்கள், பல அடுக்குகளைக் கொண்ட தங்க மாலைகள் உள்ளிட்டவை அடங்கும்.
முன்னதாக, ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமலைக்கு வந்திருந்த அந்தத் தொழிலதிபர், கோவில் நிர்வாகத்தின் கருவூல அதிகாரிகளைச் சந்தித்து, மூலவருக்கு அலங்காரம் செய்யத் தேவையான ஆபரணங்களின் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
அதன் அடிப்படையில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட ஆபரணங்கள், வரும் 26ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளன.
தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த பக்தர், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளார்.
