சென்னை: உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயர்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் தந்தையோடு லட்சியப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 16 வயது நிஷா சசிகுமார்.
இதன் மூலம் ‘மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் பெண்’ என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
சாதனையாளர்கள் இருவரும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது தமது மகள் மே 25ஆம் தேதி உலகின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாகத் தெரிவித்தார் திரு சசிகுமார்.
இதற்கு முன்பு நேப்பாளத்தைச் சேர்ந்த 16 வயதுப் பெண், 187 நாள்களில் சிகரத்தை அடைந்த நிலையில், தற்போது 16 வயதைக் கடந்து, 80 நாள்களான நிலையில், நிஷா சாதனை புரிந்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு சசிகுமார், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இச்சாதனையைப் புரிந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றார்.
தமது மகளின் இச்சாதனைமூலம், இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகள் மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார் அவர்.
இதுவரை ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷ்யாவின் எல்புரூஸ், ஆஸ்திரேலியவின் கோசியாஸ், இந்தோனீசியாவின் காஸ்டன் பிரமிட், அர்ஜென்டினாவின் அகன்காங்கோ சிகரங்களில் ஏறிச் சாதனை படைத்துள்ள தந்தையும் மகளும் அடுத்து வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள டெனாலி மலையில் ஏறத் திட்டமிட்டு உள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறக் கடந்த ஓராண்டாக பெங்களூரு, மைசூருவில் உள்ள மலைகளில் ஏறிப் பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்த நிஷா, தன் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் வாரத்தில் ஐந்து நாள்கள் பள்ளியிலும் வார இறுதியில் வெளிமாநிலங்களுக்குச் சென்றும் பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“இளம் வயதில் ஏழு கண்டங்களிலும் உள்ள மலை உச்சிகளில் ஏறிச் சாதனை படைக்கவேண்டும் என்ற லட்சியப் பயணத்தை வரும் நவம்பர் மாதத்தில் முடிக்க இருக்கிறோம்,” என்றார் நிஷா.

