சென்னை: சென்னை அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்றும், இதில் 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த ஆண்டுக் கண்காட்சியில் தாய்லாந்து பதிப்பாளர்கள் சங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 183 எழுத்தாளர்களின் நூல்கள் இடம்பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும், 400க்கும் மேற்பட்ட நூல்களுக்கு மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டம்’, தமிழ் இலக்கியத்தை உலகளவில் மேம்படுத்துவதையும் அதன் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தமிழ் அல்லாத பதிப்பாளர்களும் அனைத்துலகப் பதிப்பாளர்களும் தமிழ் படைப்புகளைத் தங்களது சொந்த மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடவும், அதன் மூலம் அந்நூல்கள் உலகெங்கிலும் உள்ள வாசகர்களுக்குக் கிடைக்கவும் இம்மானியம் வகை செய்யும்.
மொழிபெயர்ப்பு, பதிப்பித்தல் மற்றும் அந்தந்த நாடுகள் அல்லது வட்டாரங்களில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல் பிரதிகளை விநியோகித்தல் ஆகியவற்றிற்காகப் பதிப்பாளர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
புத்தகக் கண்காட்சிக்கான சின்னத்தையும் அமைச்சர் வெளியிட்டார். மாநிலத்தில் எழுந்துள்ள செயற்கை நுண்ணறிவு நூல் முறைகேடு சர்ச்சையின் பின்னணி குறித்துப் பேசிய திரு ராஜ்மோகன், “செயற்கை நுண்ணறிவு யுகத்தில், அத்தொழில்நுட்பம் நல்வழியில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம். அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்,” என்றார்.
அடுத்த ஆண்டு முதல் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பை ஈர்க்க அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி தெரிவித்தார்.
புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து நாடுகளின் பங்கேற்பு சீராக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “கண்காட்சி தொடங்கப்பட்ட 2023ஆம் ஆண்டில் 27 நாடுகள் பங்கேற்றன. தற்போது அந்த எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது,” என்றும் கூறினார்.
