சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில் பத்துக்கும் அதிகமானோர் கன்வுசிலர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 2022ஆம் ஆண்டு மேயராகப் பொறுப்பேற்ற முதல் தலித் பெண்ணான பிரியா ராஜனும் அடங்குவார்.
அவர், பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மார்ச் மாதம் 4ஆம் தேதி பதவியேற்றார்.
பிரியா ராஜனுடன் திமுக கட்சியின் கவுன்சிலர்களாகப் பதவி ஏற்றவர்களில் பலர், 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.
இதற்கிடையே, திமுக தலைமையிடம் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுவருகின்றனர்.
மேயர் பிரியா திரு.வி.க. நகர் தொகுதியிலும் துணை மேயர் மகேஷ்குமார் வேளச்சேரி தொகுதியிலும் போட்டிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.
திரு.வி.க. நகர் தொகுதியில், தற்போது திமுகவை சேர்ந்த தாயகம் கவி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் தனித் தொகுதி என்பதால் திரு.வி.க. நகர் தொகுதியில் கடந்த இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இந்த முறை திரு.வி.க.நகர் தொகுதி சென்னை மேயர் பிரியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
கட்சித் தலைமை இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் மேயர் பிரியாவும் திரு.வி.க.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், இந்த முறை சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ஐந்து பேருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

