தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திங்கட்கிழமை முதல் மருந்துகளுக்கு 5 விழுக்காடு மட்டும்தான் வரி

1 mins read
26d41357-6c73-4aec-a974-ebbd31d3ebbc
ஐந்து விழுக்காடு வரியின்கீழ் கையிருப்பு மருந்துகளைப் பொதுமக்கள் திங்கட்கிழமையிலிருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மருந்து கடைகளில் தற்சமயம் இருப்பில் உள்ள மருந்துகளையும் சேர்த்து 5 விழுக்காடு வரியுடன் குறைந்த விலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (செப்டம்பர் 22) வாங்கலாம் என்று இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபற்றிக் கூறும் அதன் தலைவர் ஜெ.ஜெயசீலன், பொதுமக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளும் தற்சமயம் 5 விழுக்காடு வரியின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அத்துடன், ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில் மீண்டும் புதிய விலை அட்டையை ஒட்டுவது சாத்தியமாகாது என்றும் அந்த மருந்துகளை, புதிய வரி விதிப்பின்படி குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் விளக்கினார்.

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது, நடப்பில் உள்ள வரி நடைமுறையில் வாங்கிய மருந்துகளைக் குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

அதில், பல்வேறு அறிவுறுத்தல்களும் பரிந்துரைகளும் மருந்து விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திரு ஜெயசீலன் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் வரும் திங்கட்கிழமை முதல் வரிச் சலுகையுடன் மருந்துகளை வாங்குவதில் எந்தத் தடையும் இருக்காது. கையிருப்பில் உள்ள மருந்துகளை வாங்கும்போதும் அவற்றை 5 விழுக்காடு வரியின்கீழ் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களை உரிமையுடன் அணுகலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்