புதுடெல்லி: வங்கிகளில் காசோலை வைப்புக்குப் பிறகு உடனடியாக பணத்தைப் பெறும் சேவை சனிக்கிழமை (அக்டோபர் 4) முதல் நடப்புக்கு வருகிறது.
விரைவாக மற்றும் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட தீர்வு கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எச்எஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள் ஒரே நாளில் காசோலையைப் பணமாக மாற்றுவதற்கான வசதியை அக்டோபர் 4ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளன.
அதன்படி, அக்டோபர் 4 முதல் வங்கிகளில் வைக்கப்படும் காசோலைகள் இனி புதிய நடைமுறையின்கீழ் ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு, பணம் சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கணக்கில் போடப்படும்.
காசோலைகள் செல்லுபடியாகாததைத் தடுக்கவும் தாமதங்கள் அல்லது நிராகரிப்பு செய்யப்படுவதை தவிர்க்கவும் காசோலையில் அனைத்து விவரங்களையும் துல்லியமாக நிரப்பப்படுவதை உறுதி செய்யும்படி வாடிக்கையாளர்களை இந்த இரு தனியார் வங்கிகளும் அறிவுறுத்தியுள்ளன.
‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’ பயன்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்தவும் சரிபார்ப்புக்கான முக்கிய காசோலை விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.50,000க்கும் அதிகமான காசோலை வைப்புக்கு குறைந்தது 24 மணி வேலை நேரத்திற்கு முன்னதாக கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை மற்றும் பயனாளியின் பெயரை வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
காசோலையை வழங்கியவுடன் வங்கிகள் இந்த விவரங்களைச் சரிபார்க்கும். தகவல் பொருந்தினால் காசோலைகள் ஏற்கப்பட்டு பணத்தை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிடில் கோரிக்கை நிராகரிக்கப்படும். மேலும், பணம் எடுப்பவர் விவரங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வட்டார முகவரிகளுக்குக் காசோலை விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். வங்கிகள் காசோலையைப் பெறுவதற்கு முன்பு ஒப்புதல் செய்தியை அனுப்பும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ள காசோலைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ‘பாசிட்டிவ் பே’ அணுகுமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது, அதே நேரத்தில் ரூ.50,000க்கும் மேலான காசோலைகளுக்கும் இது கட்டாயம் பரிந்துரைக்கப்படுகிறது.
‘பாசிட்டிவ் பே’வின்கீழ் சரிபார்க்கப்பட்ட காசோலைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் குறை தீர்வு முறையின்கீழ் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.