தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,000 நக்சலைட்டுகளைச் சுற்றி வளைத்துள்ள 20,000 படைவீரர்கள்

2 mins read
7bb4df98-2711-4389-a291-a23e6671bbe9
சத்தீஸ்கர் மாநிலம், பீஜாப்பூரில் நக்சலைட்டுகள் உள்ள மலைப்பகுதி முழுமையாகச் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - மாதிரிப்படம்: எக்ஸ்/ஆதித்யா கே எம்

பீஜாப்பூர்: ஆகப் பெரிய நக்சல் வேட்டை நடவடிக்கையாக, மூன்று இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கர் மாநிலம், பீஜாப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சலைட்டுகளைச் சுற்றிவளைத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்களைச் சுட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையில் இதுவரை குறைந்தது ஐந்து நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சல் அமைப்பை முற்றிலுமாக வேரறுக்க இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலக்கெடு வகுத்துள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெறுகிறது.

நக்சல் இயக்கத் தளபதி ஹித்மா, படைப்பிரிவுத் தலைவர் தேவா உள்ளிட்ட நக்சல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் குறித்த ரகசியத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நக்சலைட்டுகள் எவரும் தப்பிவிடாமல் இருக்க, சத்தீஸ்கர் - தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கரேகுட்டா மலைப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அடர்ந்த காடுகளையும் மலைத்தொடர்களையும் கொண்ட அப்பகுதியே மாவோயிஸ்ட் முதலாம் படைப்பிரிவின் மூலத்தளமாகக் கருதப்படுகிறது.

கிராமவாசிகள் யாரும் அந்த மலைப்பகுதிக்குள் நுழையக்கூடாது என்றும் அங்கு அதிநவீன கண்ணிவெடிகள் அதிக அளவில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் சில நாள்களுக்குமுன் மாவோயிஸ்ட்டுகள் துண்டறிக்கைமூலம் எச்சரிக்கை விடுத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாண்டில் மட்டும் சத்தீஸ்கரில் இதுவரை ஏறக்குறைய 150 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர்.

இதனிடையே, சத்தீஸ்கரின் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டிலும் நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம் மட்டும் அங்கு எட்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முக்கியத் தலைவர் ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்