சட்டீஸ்கர் அனல் மின் நிலையத்தில் வெடி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

சட்டீஸ்கர் அனல் மின் நிலையத்தில் வெடி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

2 mins read
c4bdd981-6b78-438b-a47e-13727f2483ae
வெடிப்புக்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே. தாக்கூர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் இயங்கி வரும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் குழாய் வெடித்ததில் மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

வெடிப்புக்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கே. தாக்கூர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஏறக்குறைய 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கிதாராய் என்ற இடத்தில் அந்த அனல் மின் நிலையம் அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) பிற்பகலில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் திரு தாக்கூர் கூறினார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வேதாந்தா நிறுவனம், சிங்கிதாராய் ஆலையில் நிகழ்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடைபெறுவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அனல் மின் நிலைய வளாகத்துக்குள் தொடர்ந்து பெரும் புகைமூட்டம் நீடித்து வருகிறது. இதனால் அந்த வளாகத்துக்குள் சிக்கியுள்ள சில ஊழியர்களை மீட்பதில் சிரமம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோர விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேசாய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்