சத்தீஸ்கர்: சுரங்க எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை; வாகனங்கள் தீக்கிரை

1 mins read
2e6003ae-bb6e-46bc-b867-e158f5ba7c78
சுரங்க எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை. - படம்: இந்து தமிழ் திசை

ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம், தாம்னார் பகுதியில் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலிசார் பலர் காயமடைந்தனர்; வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

சனிக்கிழமை (டிசம்பர் 27) ஜிண்டால் பவர் லிமிடெட் ஆலைக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, கன்வேயர் பெல்ட், டிராக்டர்களை அடித்து நொறுக்கித் தீ வைத்தது. மேலும், போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதில் போலிஸ் பேருந்து, ஜீப், ஆம்புலன்ஸ் ஆகியவை தீக்கிரையாகின. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தாம்னார் பகுதியில் அமையவுள்ள நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை காலை 300 பேராக இருந்த போராட்டக்காரர்களின் எண்ணிக்கை, மதியத்திற்குள் ஆயிரமாக உயர்ந்தது. பிற்பகல் 2.30 மணியளவில் போராட்டம் வன்முறையாக வெடித்தது.

இத்தாக்குதலில் காவல் துறை அதிகாரிகள் அனில் விஸ்வகர்மா, கம்லா பூசம், பெண் போலிஸ் உட்பட பலர் காயமடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் மயங்க் சதுர்வேதி கூறுகையில், “கடந்த 15 நாட்களாகப் போராட்டம் அமைதியாகவே நடைபெற்றது. சனிக்கிழமை மதியம் சில சமூக விரோத சக்திகள் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்திவிட்டனர்,” என்றார்.

“மாநில அரசின் பிடிவாதமே இந்த வன்முறைக்குக் காரணம். சுரங்கத்திற்காகப் பழங்குடியின மக்களை அவர்களின் நிலங்களிலிருந்து அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது,” என்றார் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ்.

குறிப்புச் சொற்கள்