புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாகப் பூஷன் ராமகிருஷ்ண கவாய் நியமிக்கப்படவுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்தியச் சட்டத்துறை அமைச்சிடம் திரு கவாயின் பெயரைப் பரிந்துரைத்தார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார்.
உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாகக் கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
இதையடுத்து, 52வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி திரு கவாய் பதவியேற்கவுள்ளார். இவர், நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை ஆறு மாதக் காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தொடர்வார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர் திரு கவாய். 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்தார். பின்னர் 1992ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கிய நீதிமன்ற அமர்வில் கவாய் இருந்துள்ளார். பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தோரில் இவரும் ஒருவர்.