புதுடெல்லி: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் அதிஷி. இந்நிலையில், முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியைக் காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாள்களாக இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் 13ஆம் தேதி பிணையில் விடுதலையானார். தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், புதிய முதல்வராக அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக அதிஷி சிங் மர்லேனா பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
திங்கட்கிழமை (செப்.23) காலை அதிஷி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியைக் காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ராமாயணத்தில் பரதருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இன்று எனக்கு. அவரது சுமையைப் போல நானும் இதை சுமக்கிறேன். எப்படி ராமரின் பாதுகையை (காலணி) அவர் தனது அரியணையில் வைத்து ஆட்சி செய்தாரோ, அதே உணர்வோடு அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன்,” என்றார்.

