போபால்: நர்மதை ஆற்றங்கரையோரம் சுற்றியுள்ள ஆன்மிக நகரங்களில் உடனடியாக மது, இறைச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
நர்மதை ஆற்றில் நீரோட்டம் சீராக இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், இதற்காக சிறப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, நர்மதை நதியின் பிறப்பிடமான அமர்கண்டாக் பெயரில் இந்த ஆணையம் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
வருங்காலங்களில் மக்கள் குடியேற்றத்துக்காக செயற்கைக்கோள் நகரங்களை உருவாக்கும்போது அவற்றுக்கான நிலங்கள் நர்மதை நதியில் இருந்து நன்கு தள்ளி இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் நதிக்கரையோரம் திடக்கழிவு மேலாண்மைக்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் முதல்வர் மோகன் யாதவ் வலியுறுத்தினார்.