43 திட்டங்களுக்கு முதல்வர் நிதீஷ்குமார் ஒப்புதல்; பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு

1 mins read
46ff72d8-0414-4b18-97f8-2b4c5e483013
பீகார் முதல்வர் நிதீஷ் குமார். - படம்: ஊடகம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களுக்குப் பலனளிக்கும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளது.

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 8) காலை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநிலத் தலைமைச் செயலாளர் சித்தார்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக, பீகார் மாநில இளைஞர் ஆணையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள், உயர்கல்வி பயில்வதற்கான உதவி தேவைப்படும் இளைஞர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆணையம் செயல்படவுள்ளது.

“பீகார் மாநில அரசுப் பணிகளில் இம்மாநிலத்தைச் சேர்ந்த 35 விழுக்காட்டு பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“பருவமழை, வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ரூ.100 கோடி டீசல் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்