சென்னை: தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இடிந்து விழும் அவலநிலையில், தனது விளம்பர ஆசைக்காக விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
“தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில் தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும் இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு தெரிவித்திருந்தது.
ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை மாதம் ரூ.1,500 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல் ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 - 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 - 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என்று அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.