தஞ்சாவூரில் புதிய மினி பேருந்துகள் சேவையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

2 mins read
13d470e1-78e9-4ade-a9c9-b0d3403aa9fb
புதிய மினி பேருந்துகள் சேவையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தஞ்சையில் போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களுக்கு 170 மினி பேருந்துச் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்திற்கு அவர் இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார்.

அதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர், திருச்சியிலிருந்து காரில் கல்லணைக்குச் சென்றார். சுமார் மாலை 6 மணி அளவில் கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கிருந்து தஞ்சை வந்த அவர் கலைஞர் அறிவாலயத்திற்குச் சென்றார். பின்னர் ரயிலடி, காந்திஜி சாலை, ஆத்துப்பாலம் வழியாக பேருந்து நிலையத்திற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்டாலின் சாலை வழி நடந்து சென்றார்.

அப்போது பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டதோடு அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

அப்போது, சாலையின் இரண்டு புறங்களிலும் நின்று இருந்த தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வரின் வருகையையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையைத் திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். முதல்வரின் வருகையையொட்டி தஞ்சை சுற்றுலா மாளிகையில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது.

தஞ்சாவூரில் திங்கட்கிழமை (16.06.2025) ஸ்டாலின் சுமார் 170 மினி பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார்.

100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு இந்தப் பேருந்து சேவை இயக்கப்படும். இந்த மினி பேருந்து திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தற்பொழுது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கடந்த சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்து இருந்தார்.

அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 1,842 புதிய மினி பேருந்து சேவையைத் தஞ்சாவூரில் முதல்வர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்