சென்னை: அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற இருக்கும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று மரியாதை செலுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்குகிறது.
அன்று காலை 6 மணிக்கு தேவர் நினைவாலய அறங்காவலர்குழு தலைவர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
முதல் நாள் தேவரின் ஆன்மிக விழாவாக நடக்கவிருக்கிறது. அன்று கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை, தேரோட்டம் நடைபெறும். மறுநாள் (அக்டோபர் 29) தேவரின் அரசியல் விழாவாக நடைபெறுகிறது. 30ஆம் தேதி தேவர் குருபூஜையையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது.
அதில் பங்கேற்று தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் மரியாதை செலுத்துகின்றனர்.
காலை 9 மணி அளவில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் மரியாதை செலுத்துகின்றனர். அதற்குரிய விரிவான ஏற்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
அக்டோபர் 30ஆம் தேதி காலை மதுரை வரும் விஜய், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் தொடர்ந்து மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சாலை வழியாக வேனில் புறப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு பசும்பொன் செல்ல இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
