தினமும் 84 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கினார்

தினமும் 84 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கினார்

படம்: தினத்தந்தி

02 Oct 2026 - 7:08 pm

2 mins read

சென்னை: பெண்களுக்கான இலவசப் பேருந்துச் சேவையின் விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

வெற்றிப் பயணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டத்தைக் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேருந்தில் இருந்த பெண்களுக்கு முதல்வர் விஜய் பயணச்சீட்டு வழங்கினார். அவரை நேரில் கண்ட பெண்கள் அவரிடம் ஆவலுடன் நலம் விசாரித்தனர். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று அங்கு அமர்ந்திருந்த பெண்களுக்கு அவரே பயணச்சீட்டுகளை வழங்கினார்.

அப்போது, விஜய்க்கு பெண் பயணிகள் சாக்லெட் கொடுத்தும் கைகளால் திருஷ்டிபோட்டும் நன்றியைத் தெரிவித்தனர். பதிலுக்கு விஜய்யும் அவ்வாறு செய்தார். பின்னர், பெண் பயணிகளுடன் அமர்ந்து அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தமிழகத்தில் பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தைக் கடந்த திமுக அரசு அறிமுகம் செய்தது. அந்தத் திட்டத்தின்படி, மாநகர, நகர்ப்புற சாதாரண அரசுப் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணம் செல்லலாம்.

சட்டசபைத் தேர்தலின்போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பயணத்திட்டம் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த விரிவாக்கத் திட்டத்திற்கு வெற்றிப் பயணம் என்று பெயர் சூட்டப்பட்டது.

அந்தத் திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி விரைவுப் பேருந்துகள் உட்பட எல்லா அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகச் செல்லலாம்.

ஏழு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,695 பேருந்துகளில் தினமும் 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறுவார்கள் என போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் கிடையாது.

குறிப்புச் சொற்கள்
பேருந்துவிஜய்திட்டம்