முதல்வர் விஜய்யின் தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேறியது

முதல்வர் விஜய்யின் தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேறியது

2 mins read
bc9727e0-77d8-42f1-a266-eb44f23f992c
2026 ஏப்ரல் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது ​​தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலைத் திமுக தலைவர் முக ஸ்டாலின் எரித்தார். - கோப்புப் படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

சென்னை: முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தீர்மானம் நிறைவேற திமுகவும் காங்கிரசும் கைகொடுத்தன.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்குமுன் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

இதில் திருத்தப்பட்ட தொகுதி மறு​வரையறை மசோதாவை மீண்​டும் கொண்​டுவர முயற்சிப்​ப​தாகத் தகவல்​கள் தெரிவிக்கின்றன.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க எம்பிக்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 4ஆம் நாளான புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

அந்தத் தனித் தீர்மானத்தில் மக்களவைத் தொகுதிகள் 543 தொகுதிகளாகத் தொடர வலியுறுத்தித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் ஆளும் தவெகவின் ஆதரவுக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவைச் சேர்ந்த ஒரேயொரு எம்எல்ஏ போஜராஜன், பாமக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை என்று தெரிவித்தார்.

முதல்வர் விஜய் கொண்டுவந்த தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் கணக்கெடுப்பு நடைபெற்றது. இறுதியில், தவெக, திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்