மகாகும்பமேளா: அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு

2 mins read
10a1ece2-c3fd-4d86-b963-4a6dcf91a0ea
மகாகும்பமேளா 2025 ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடக்கிறது.

அடுத்த மகாகும்பமேளா 2025 ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. 45 நாள்கள் நடக்கும் இந்த விழாவிற்கஅன ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மகாகும்பமேளாவுக்கு மிக முக்கிய பிரமுகர்களை அழைப்பதற்காக உத்தரப் பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் டெல்லி சென்றார். அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவருக்கு மகாகும்பமேளாவின் இலச்சினை பொருத்தப்பட்ட சிறப்புப் பரிசுகளை வழங்கினார்.

துணை அதிபர் ஜெகதீப் தன்கர், முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மிசோரம் ஆளுநர் வி.கே.சிங் ஆகியோருக்கும் நேரில் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, உத்தப்பிரதேச மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா, டெல்லியில் ஒரு வாகனப் பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசினார், “மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல் அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. டெல்லி முதல் அமைச்சர் அதிஷியையும் சந்தித்து அழைப்பு விடுப்போம்.

“மகாகும்பமேளாவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதற்கு மூன்று விதமான முறைகள் பயன்படுத்தப்படும். ஒரு முறையில், கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் பக்தர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். 2வது முறைப்படி, பக்தர்கள் கை மணிக்கட்டில் அடையாளப் பட்டை அணிவிக்கப்படும். அதன் உதவியால், பக்தர்கள் உள்ளே நுழையும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் கண்காணிக்கப்படும்.

“3வது முறைப்படி, பக்தர்களின் சம்மதத்துடன், கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி, ஜி.பி.எஸ். மூலம் பக்தர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும்.

“மகாகும்பமேளாவுக்கென தனி இணையத்தளம், செயலி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் 11 மொழிகளில் ‘சாட்பாட்’, ‘கியூஆர்’ கோடு அடிப்படையிலான அனுமதி அட்டைகள், ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, கூகல் வரைபடத்தில் அனைத்து இடங்களும் ஒருங்கிணைப்பு, பல மொழிகளில் மின்னிலக்க வழிகாட்டிப் பலகைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

“தொலைந்துபோன பக்தர்களைக் கண்டுபிடித்து மீட்க பல மொழிகள் கொண்ட கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 101 அறிவார்ந்த வாகன நிறுத்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தினந்தோறும் 5 லட்சம் வாகனங்களை நிறுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்