அயோத்தி: இந்தியாவின் அயோத்தி நகரில் உள்ள ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யர் சத்தியேந்திர தாஸ் காலமானார்; அவருக்கு வயது 83.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் முதுநிலைப் பட்டக்கல்விக் கழகத்தில் (SGPGIMS) அவர் காலமானார் என்று அக்கழகம் செய்தி அறிக்கை முலம் தெரிவித்தது.
மூளை பக்கவாத பாதிப்பால் ஆச்சார்யர் சத்தியேந்திர தாஸ் இம்மாதம் இரண்டாம் தேதி சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் முதுநிலைப் பட்டக்கல்விக் கழகக்தில் அனுமதிக்கப்பட்டார். இம்மாதம் நான்காம் தேதியன்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நலம் விசாரிக்க ஆச்சார்யரை நேரில் சென்று பார்த்தார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அயோத்தி ராமர் கோயில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி அதன் ஓராண்டு நிறைவைக் கொண்டாடியது. அந்தக் கொண்டாட்டங்கள் மிகவும் அழகாக இடம்பெற்றதாக ஆச்சார்யர் சத்தியேந்திர தாஸ் பாராட்டு தெரிவித்திருந்தார்.
தமது 20ஆம் வயதில் ஆன்மீகப் பாதையில் சென்ற அவர், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.