பெராயிச்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெராயிச் மாவட்டம் கரும்புத் தோட்டங்களுக்கும் வளமான மண்ணுக்குப் பெயர் போனது.
இந்த மாவட்டம் இந்தியா-நேப்பாளம் எல்லைப் பகுதியில் உள்ளது.
ஆனால் இவ்வாண்டு அப்பகுதியில் உள்ள மக்களை அச்சம் ஆட்டிப்படைக்கிறது.
கடித்துக் குதறிக் கொல்லப்பட்ட சிறுவர்களின் சடலங்கள் கரும்புத் தோட்டங்களில் காணப்பட்டதே இதற்குக் காரணம்.
இந்தக் கோரச் சம்பவங்களுக்கு ஓநாய்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கரும்புத் தோட்டங்களில் அவை யார் கண்களுக்கும் படாமல் மறைந்திருப்பதாகவும் இரவு நேரங்களில் வேட்டையாடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலை, படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த அஞ்சலி கஷ்யப் எனும் இரண்டரை வயது பெண் குழந்தை திடீரெனக் காணாமல் போனதாக குழந்தையின் தாயார் கூறினார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி பின்னிரவு 2 மணி அளவில் விலங்கு ஒன்று தமது படுக்கை மீது குதித்து தமது 8 வயது மகனான கிஷனை வாயால் இழுத்துச் சென்றதாக ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விலங்கு தமது மகனுடன் இருளில் மறைந்ததாக அவர் கூறினார்.
பல மணி நேரம் கழித்து, அச்சிறுவர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் கரும்புத் தோட்டங்களில் கண்டெடுக்கப்பட்டன.
கிஷனின் வலது நெஞ்சுப் பகுதியையும் அஞ்சலியின் இரு கரங்களையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஒன்பது சிறுவர்கள் உட்பட பத்து பேரை ஓநாய்கள் கொன்றுவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் ஓநாய்களால் தாக்கப்பட்டு பெரியவர்கள் பலரும் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் ஏழைகள் பலர் வாழ்கின்றனர்.
பலரது வீடுகளுக்குக் கதவுகள்கூட இல்லை.
இதனால் இரவுநேரத்தில் விலங்குகள் மிக எளிதாக அவர்களது வீடுகளுக்குள் நுழைந்துவிட முடியும்.
ஓநாயால் கிஷன் கொல்லப்படுவதற்கு முன்பாகவே, வீடு கட்ட அவரது தந்தையான திரு சித்துவுக்கு 139,000 ரூபாய் (S$2,150) மானியம் வழங்கப்பட்டது.
ஆனால், ஈரறை வீட்டைக் கட்ட திரு சித்து தமது விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விட்டு மேலும் 15,000 ரூபாய் கடன் வாங்கினார்.
வீட்டைக் கட்டிய திரு சித்து, கதவு முக்கியம் எனக் கருதவில்லை.
மேலும் 5,000 ரூபாய் கடன் வாங்கி கதவு பொருத்தப்பட்டிருந்தால் தமது மகன் உயிருடன் இருந்திருப்பான் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.
இந்நிலையில், திரு சித்து, மாண்ட அஞ்சலி ஆகியோரின் வீடுகளுக்கு இப்போது கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றைக் கிராம அதிகாரிகளும் வனத்துறையினரும் வழங்கினர்.
மேலும் இரவு நேரங்களில் கிராமத்தைச் சேரந்த ஆடவர்கள் தடிகளுடன் காவல் காக்கின்றனர்.
இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதியிலிருந்து ஓநாய்களைக் கண்ணிவைத்துப் பிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிடிபடும் ஓநாய்கள் விலங்கியல் தோட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

