கெளகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த கோர விபத்தில் பெற்றோரை விட்டுப் பிரிந்த கைக்குழந்தை மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பிரிந்த குழந்தை மருத்துவப் பணியாளர்களின் பராமரிப்பில் இருந்தது.
பெங்களூரில் பணிபுரியும் ராகுல், நிகிதா கோலா இணையர் தங்களின் கைக்குழந்தை தேவ் கோலாவுடன் சிறிய பேருந்தில் பயணம் செய்தனர்.
வெள்ளிக்கிழமை காசிரங்காவில் அப்பேருந்து கொள்கலன் சரக்குந்துடன் மோதியதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோலா இணையர் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்திற்குப் பிறகு பெற்றோரை விட்டுப் பிரிந்த தேவ், சிறிய காயங்களுடன் பொகாகாட் துணைக் கோட்ட அரசு மருத்துவமனையில் நான்கு நாள்கள் சிகிச்சை பெற்றான்.
பெற்றோர் இருவரும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்களால் குழந்தையை அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை கோலாகாட் சிறார் நலக் குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, அண்டை வீட்டாரின் திறன்பேசியில் வெளியான காணொளிகள் மூலம் குழந்தையை அடையாளம் கண்ட தாய்வழித் தாத்தா, பாட்டி நேற்றிரவு பொகாகாட் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அதிகாரிகள் அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, பெற்றோர் குணமடையும் வரை குழந்தையைத் தற்காலிகமாகப் பராமரிக்க அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இவ்விபத்தை அடுத்து, சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்த 12 அம்சச் செயல்திட்டத்தையும் புதிய நடைமுறையையும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்கட்கிழமை அறிவித்தார்.
