புதுடெல்லி: இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகச் சீனா அறிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சீன வெளியுறவு அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தகுதியான வெளிநாட்டினருக்குச் சீனா தொடர்ந்து விசா வழங்கி வருவதாகவும் இரு நாட்டு வர்த்தகர்களின் பயணங்களை எளிதாக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த மாதம் ஷாங்காயில் நடைபெற்ற சீன அனைத்துலக இறக்குமதிக் கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பித்த இந்தியத் தொழிலதிபர்களில் மிகக் குறைவானவர்களுக்கே விசா வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும், விசா விண்ணப்பங்களைப் பெற்று வந்த தனியார் சேவை மையத்தை நிறுத்திவிட்டு, தற்போது சீனத் தூதரகங்களே நேரடியாக விண்ணப்பங்களைக் கையாண்டு வருகின்றன.
2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைச் சரிசெய்யும் விதமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியது.
அத்துடன், டெல்லி-பீஜிங் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே நேரடி விமானச் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.
சீனக் குடிமக்களுக்கான விசா நிராகரிப்பு விகிதம் அண்மைய மாதங்களில் ஏறக்குறைய ஏழு விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், இந்திய விண்ணப்பதாரர்களுக்காகக் கடந்த டிசம்பர் மாதம் ‘சீன இணையவழி விசா விண்ணப்ப முறையை’ பீஜிங் அறிமுகப்படுத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ உச்சநிலை மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.
இரு நாடுகளும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும் என்ற அந்தச் சந்திப்பின் முக்கியப் புரிதலை நடைமுறைப்படுத்த இருதரப்பும் பணியாற்றி வருவதாகவும் இருதரப்பு உறவை வலுப்படுத்தச் சீனா தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
