சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா புதுக் கட்டுப்பாடுகள்

சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா புதுக் கட்டுப்பாடுகள்

கோப்புப் படம்: குளோபல் ஹைவேஸ்

20 Oct 2026 - 3:32 pm

2 mins read

புதுடெல்லி: பாதுகாப்பு, தேசிய நலன்களைக் காரணம் காட்டி, சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், தூர்வாரும் இயந்திரங்களின் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 18ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.

சீன வர்த்தக அமைச்சு திங்கட்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட தகவலின்படி, இந்த இயந்திரங்கள் சிவில், ராணுவப் பயன்பாடு இரண்டிற்கும் உகந்தவை என்பதால், நாட்டின் பாதுகாப்பைப் பேணவும் அனைத்துலக அணுவாயுதப் பரவல் தடை விதிமுறைகளைப் பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்

சீனாவின் இந்தத் திடீர் முடிவால் இந்தியாவில் பல முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்கள், ரயில்வே வழித்தட விரிவாக்கங்கள், எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முக்கியச் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகளுக்கு துளையிடும் இயந்திரங்கள் பேரளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா, தன் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களையே முதன்மையாக நம்பியுள்ளது.

கடந்த 2024 முதலே சீனாவிலிருந்து இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்வதில் சுங்க அனுமதிச் சிக்கல்களும் தாமதங்களும் நிலவிவந்தன. இதுகுறித்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கெனவே சீன அதிகாரிகளிடம் தன் கவலையைத் தெரிவித்திருந்தார்.

தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள்

அண்மைக் காலமாக சீனா தனது உயர்தொழில்நுட்ப ஏற்றுமதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், சிறப்பு வகை ஆளில்லா வானூர்திகள் ஏற்றுமதிக்கு சீனா ஏற்கெனவே கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், தற்போது சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கும் தடை விதித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறையில் காலடித் தடம்பதிக்கும் முயற்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சுரங்கம்சீனாஏற்றுமதிதடை