இந்திய வளர்ச்சிக்கு சில்லு உற்பத்தி அவசியம்: மோடி

இந்திய வளர்ச்சிக்கு சில்லு உற்பத்தி அவசியம்: மோடி

ப்டம்: சிஎன்பிசி

22 Feb 2026 - 3:59 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக உருவெடுத்தால் மட்டுமே வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது கட்டமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்தியாவில் சில்லு உற்பத்தி மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹெச்சிஎல் (HCL) குழுமம், ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘இந்தியா சிப் பிரைவேட்’ நிறுவனம் என்ற சில்லு தயாரிப்பு ஆலையை கிரேட்டர் நொய்டா பகுதியில் அமைக்க உள்ளன.

இதன் அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘கொவிட்-19’ பெருந்தொற்று காலத்தில் சில்லு விநியோகம் தடைப்பட்டதால் ஏற்பட்ட பொருளியல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினார்.

பல தொழிற்சாலைகள் உற்பத்தி இலக்கை அடைய முடியவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்சார்பு இந்தியா அமைந்தால்தான் இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்றும் இந்தப் புத்தாண்டுக் காலத்தில் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் 21ஆம் நூற்றாண்டின் நாட்டின் திறனுக்கான அடித்தளமாக அமையும் என்றார் பிரதமர் மோடி.

பகுதி மின்கடத்தித் துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 10 பகுதி மின்கடத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இவற்றுள் நான்கு அலகுகள் மிக விரைவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாகவும் இந்திய சில்லு உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்கள் அடியெடுத்து வைப்பதை வரவேற்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாடு இன்றைய உலகின் நம்பகமான கூட்டாளி என்று மோடி கூறினார்.

எனவே உலகின் தொழிற்சாலையாக இந்தியா அங்கீகரிக்கப்படுவது இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் மற்ற உலக நாடுகளுக்கும் வெற்றியைத் தரும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
பகுதி மின்கடத்திபிரதமர்நரேந்திர மோடிவளர்ச்சி