தூய்மைக் காற்றுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய நகரங்கள்

தூய்மைக் காற்றுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய நகரங்கள்

2 mins read
0acb0ffe-150e-4a11-ba8a-600c3a9de606
தமிழக அளவிலான செயல்பாட்டில் திருச்சி நகரம் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தின்கீழ், இந்திய அரசு ஆண்டுதோறும் நடத்திவரும் காற்று மாசுபாடு ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டின் 130 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்திய நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களின் பிரிவில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரம் 200க்கு 198 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்தூர் (197 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும் ஜபல்பூர் (195 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

தலைநகர் டெல்லி 172 புள்ளிகளுடன் 21வது இடத்தைப் பிடித்து, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு போன்ற முன்னணி நகரங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மூன்று முதல் பத்து லட்சம் வரையிலான மக்கள் தொகை பிரிவில் ஒடிசாவின் ரூர்கேலாவும் மூன்று லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில் கலிங்கா நகரும் முதலிடம் பிடித்துள்ளன.

தமிழக அளவிலான செயல்பாட்டில் திருச்சி நகரம் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

எனினும், தேசிய அளவில் மூன்று முதல் பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரிவில் திருச்சி 12வது இடத்தைப் பெற்றுள்ளது.

அதேவேளையில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பிரிவில் மதுரை நகரம் 132.1 புள்ளிகளுடன் 39வது இடத்தைப் பெற்றுப் பின்தங்கியுள்ளது.

குப்பைகளைத் திறந்தவெளியிலும் நீர்நிலைகளிலும் எரிப்பதே மதுரையின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு 186 மதிப்பெண்களுடன் 9வது இடத்தில் இருந்த திருச்சி, நிகழாண்டு 3 இடங்கள் பின்தங்கியுள்ளது.

சென்னை 147.7 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் 35வது இடமும் மாநில அளவில் 2வது இடமும் பிடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்