இட நெருக்கடிக்குத் தீர்வுகாண உருவாகும் ‘மும்பை 3.0’ நகரம்: ரூ.4,000 கோடி ஒதுக்கீடு

இட நெருக்கடிக்குத் தீர்வுகாண உருவாகும் ‘மும்பை 3.0’ நகரம்: ரூ.4,000 கோடி ஒதுக்கீடு

2 mins read
b76fb4c6-7486-46c2-b2e0-f17c3a955218
124 கிராமங்களை உள்ளடக்கி ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’ என்ற பெயரில் புதிய நகரத்தை அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. - சித்திரிப்புப் படம்: ரியாசத்
Google News Preferred Icon

புனே: ‘இந்தியாவின் நிதித் தலைநகர்’ என வர்ணிக்கப்படும் மும்பை மாநகரில் நிலவும் இட நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், மகாராஷ்டிர அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ‘மும்பை 3.0’ என்ற அந்தத் திட்டத்துக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இட நெருக்கடியுள்ள நகரங்களின் பட்டியலை மும்பை மாநகரின் பெயரின்றித் தயாரிக்க முடியாது. அந்த அளவுக்கு அங்கு பல ஆண்டுகளாக கடும் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை இட நெருக்கடியைக் குறைக்க ‘நவி மும்பை’ உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நவி மும்பையிலும் நிலத்தின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதைக் கவனத்தில் கொண்டு, ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த உரான், பன்வெல், பென் ஆகிய தாலுகாக்களில் உள்ள 124 கிராமங்களை உள்ளடக்கி ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’ என்ற பெயரில் புதிய நகரத்தை அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இரு முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் 323.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தப் புதிய நகரம் கட்டமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்காக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நில உரிமையாளர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவது, புதிய நகரத்தில் பல்வேறு முன்னுரிகளை அளிப்பது உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அடல் சேது பாலம், நவி மும்பை அனைத்துலக விமான நிலையம், மும்பை-புனே விரைவுச்சாலை போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மிக அருகில் புதிய நகரம் அமைய உள்ளதால், இதன் போக்குவரத்து இணைப்பு மிகவும் வலுவாக இருக்கும் எனத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப மையங்கள், தகவல் தரவு மையங்கள், நிதிச் சேவைகள், கல்வி, சுகாதாரம், பசுமை மண்டலங்கள் என அனைத்து நவீன வசதிகளுடன் அமையவுள்ள புதிய நகரம், மகாராஷ்டிராவின் பொருளியல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்