தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பு

2 mins read
f623c9b6-eae1-44b1-897a-a9ed59e2375e
ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. - படம்: கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் கடுமையான குற்றத்தைச் செய்தாலோ அல்லது அலட்சியமாக இருந்தாலோ அவர்களின் ஓய்வூதியத்துடன் பணிக்கொடையும் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல, ஓய்வுக்குப் பிறகு வசதியான வாழ்க்கைக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் முக்கியம்.

மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த சில உத்தரவுகள் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பாக சில கடுமையான விதிகளை விதித்துள்ளது.

ஊழியர்கள் தங்கள் கடமைகளை புறக்கணிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றவும், முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய மாற்றங்களின் கீழ், ஊழியர்கள் ஒரு குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை அரசு ஓரளவு அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கலாம்.

இந்த விதி தற்போதைய ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு அவர் பணியில் இருக்கும்போது செய்த குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவருக்கு ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கப்பட்டிருந்தால் அந்தத் தொகையை அரசு திரும்பப் பெறலாம். தற்போது இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை சென்றடைந்துள்ளது.

வரும் நாட்களில், மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை செயல்படுத்தப்படலாம். இந்த நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஒழுக்கத்துடன் செயல்பட ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021ல் அண்மையில் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்