தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உச்ச நீதிமன்றத்திலிருந்து வழக்கறிஞரை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

2 mins read
5802a0fa-859d-4cd2-aa7c-2058172e9f08
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: வழக்கு விசாரணையின்போது குறுக்கிட்டு இடையூறு செய்த மூத்த வழக்கறிஞரை வெளியேற்றும்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் காவலர்களுக்கு உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி விசாரித்தார்.

விசாரணையின்போது மனுதாரரின் வழக்கறிஞரான நரேந்தர் ஹூடா தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார். அப்போது, மூத்த வழக்கறிஞரான மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கு, திரு ஹூடா வாதத்தை முடித்தபின் பேசும்படி திரு நெடும்பராவிடம் தலைமை நீதிபதி கூறினார்.

ஆனால், “இங்கு இருப்பவர்களில் நான்தான் மிக மூத்த வழக்கறிஞர். அவருக்கு என்னால் பதில் கூறமுடியும். நான் நீதிமன்றத்தின் நண்பன்,” என்று திரு நெடும்பரா சொன்னார்.

அதற்கு, அப்படி யாரையும் தாம் நியமிக்கவில்லை என்று தலைமை நீதிபதி கூறினார்.

உடனே, தம்மை அவமதித்தால் நீதிமன்றத்திலிருந்து வெளியேறி விடுவதாகத் திரு நெடும்பரா கோபத்துடன் சொன்னார்.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி, “உங்களை எச்சரிக்கிறேன். இங்கு நான்தான் தலைமை வகிக்கிறேன். காவலர்களே! இவரை இங்கிருந்து அகற்றுங்கள்,” என்று உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் இதுபோல் தொடர்ந்து பேசினால் நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து, திரு நெடும்பரா அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் நீதிமன்றத்திற்குத் திரும்பிய திரு நெடும்பரா, தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

கடந்த 2023 மார்ச்சில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போதும் குறுக்கிட்டுப் பேசியதால் திரு நெடும்பராவைத் தலைமை நீதிபதி கண்டித்தது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்