சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நிபந்தனை பிணையில் விடுதலை

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நிபந்தனை பிணையில் விடுதலை

1 of 2
படம்: இந்து தமிழ் திசை
படம்: இந்து தமிழ் திசை

18 Oct 2026 - 5:00 pm

2 mins read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பூங்காவில் தேசியக் கொடியேற்றிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் டெல்லி நீதிமன்றத்தால் நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 13ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையிலுள்ள நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தலைலைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை விட்டுவிலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் தேசியக் கொடியேற்றி போராட்டம் நடத்தப்போவதாக சிஜேபி தலைமை அறிவித்திருந்தது.

இதற்காக டெல்லியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அதன் நிறுவனர் அபிஜித் திப்கேவைக் காவல்துறை வழியிலேயே கைது செய்தது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, டெல்லி மண்டிர் மார்க் பகுதியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அபிஜித் திப்கே முன்னிலைப்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, அவரை நிபந்தனைப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

அதன்படி, ‘அடுத்த ஓராண்டு காலத்துக்குச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன்’ என உறுதிமொழிப் பத்திரத்தில் அபிஜித் திப்கே கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், ரூ.50,000 பிணைத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ராம் லீலா திடலில் போராட்டம் நடத்த அனுமதி

இதனிடையே, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராம் லீலா திடலில் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்டப் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி அத்திடலில் மிகப்பெரிய அளவிலான கண்டனப் போராட்டத்தை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் போராட்டக்களங்கள் தொடர்பான முக்கியமான மாற்றங்களை டெல்லி காவல்துறை அண்மையில் அறிவித்தது.

இந்தப் புதிய அறிவிப்பின் பின்னணியில், காங்கிரஸ் கட்சி விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த டெல்லி காவல்துறை, நவம்பர் 1ஆம் தேதி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்த நிகழ்விற்கான தடையில்லாச் சான்றிதழையும் காவல்துறை முறைப்படி வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிஜேபிபோராட்டம்கைதுபிணைவிடுதலை