புதுடெல்லி: இந்தியாவின் கட்டுப்பாட்டில் காஷ்மீர் பகுதியில் வியாழக்கிழமை (மே 22) பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அங்குக் கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்துவருவதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டது.
துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட இந்திய ராணுவ வீரர் மோசமான காயங்களுக்கு ஆளானதாக இந்திய ராணுவத்தின் வெள்ளை வீரர் படை தெரிவித்தது. அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுக்கப்பட்டபோதும் அவற்றின் பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் அப்படை கூறியது.
பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட காஷ்மீர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இரு பகுதிகளாகப் பிரிந்திருக்கிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து காஷ்மீர் அவ்வாறு பிரிந்திருக்கிறது. இருநாடுகளும் அப்பகுதியை முழுமையாகச் சொந்தம் கொண்டாடிவருகின்றன.
பயங்கரவாதிகளுடனான மோதல் காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைச் செயலிழக்கவைக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருவதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமையன்று முன்னதாகத் தெரிவித்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று காஷ்மீரின் பஹல்காம் நகரில் பயங்கரவாதிகள் இந்திய சுற்றுப்பயணிகள்மீது தாக்குதல் நடத்தினர். 26 ஆடவர்கள் கொல்லப்பட்ட அச்சம்பவத்தைத் தொடர்ந்து இருநாட்டு உறவு மேலும் மோசமடைந்தது. நிலைமை முழுவீச்சில் போர் மூளக்கூடிய நிலைமைக்குச் சென்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு மாதம் கழித்து கிஷ்த்வாரில் பயங்கரவாதிகளுடனான மோதல் ஏற்பட்டுள்ளது.