மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்தது: பாதுகாப்புப் படையினர் குவிப்பு

மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்தது: பாதுகாப்புப் படையினர் குவிப்பு

படம்: நியூஸ்பைட்ஸ்

06 Feb 2026 - 4:13 pm

2 mins read

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற மறுநாளே, அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென், அச்சமூகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அரசில் இணைந்தது சர்ச்சையாகி உள்ளது.

அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தங்கள் எச்சரிக்கையை மீறி மணிப்பூர் அரசு குக்கி சமூக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்த்ததற்கு அச்சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து, பழங்குடி அமைப்புகளுக்கான கூட்டு மன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், குக்கி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சுயாட்சி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் கலவரம் மூண்டது. அப்போது, கலவரக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு தீ வைத்தனர்.

மேலும், சில இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அமைதியை நிலைநாட்ட காவல்துறை, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசின் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள நெம்சா, உடனடியாக பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் பரவலாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நெம்சாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும், அங்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூரின் முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியில் குக்கி, மெய்டி பழங்குடியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரத்தில் முடிந்தது. அப்போது, 200க்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர்.

இதையடுத்து அங்கு அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதல்வர் பைரேன் சிங் பதவி விலகினார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது மூண்ட கலவரமே முதல்வர் பதவி விலகக் காரணமாய் அமைந்தது.

இந்நிலையில், மணிப்பூரில் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் மூண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்