புதுடெல்லி: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களை மின்னிலக்க முறையில் மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
அதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்பட்ட நிலையில், அத்தகவல்களை சிபிஎஸ்இ மறுத்துள்ளது.
மேலும், திட்டமிட்டப்படி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மூன்றாம் வாரத்தில் வெளியாகும் எனப் புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கையில் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் அளித்த நேர்காணலில்,”12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மின்னிலக்க முறைப்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவது மிகுந்த பெருமைக்குரியது,” என்று கூறினார்.
எனவே, மே மூன்றாவது வாரத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மின்னிலக்க முறையில் திருத்தம் செய்யும் நடைமுறையைத் தற்போதைய 2026 பொதுத் தேர்வுமுதல் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது.


