லக்னோ: தந்தையிடமிருந்து பணம் பறித்து ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில், ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் கடத்தல் நாடகமாடிய சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
சீதாப்பூரைச் சேர்ந்த அம்மாணவனின் தந்தை சிறிய அளவில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மகனுக்கு ஐபோன் வாங்கித் தரும் அளவிற்கு அவருக்கு வசதி இல்லை.
ஆனாலும், எப்படியேனும் ஐபோன் வாங்கிவிட வேண்டுமென்ற ஆசையில் தான் கடத்தப்பட்டதாக அச்சிறுவன், தன் தந்தையிடமே கடத்தல் நாடகமாடினான். தான் விடுவிக்கப்பட வேண்டுமெனில் ஐந்து லட்ச ரூபாய் தரவேண்டும் என்று அவன் மிரட்டினான்.
கடந்த புதன்கிழமை பள்ளி முடிந்தபின் அவன் வீடு திரும்பாததால் அவன் தந்தையும் உறவினர்களும் அவனைத் தேடினர். இரவு 8.30 மணியளவில், மகனை விடுவிக்க வேண்டுமெனில் பணம் தர வேண்டும் என வாட்ஸ்அப் வழியாக அவன் தந்தைக்கு அழைப்பு வந்தது.
இதனையடுத்து, அவன் தந்தை காவல்துறையின் உதவியை நாடினார்.
இவ்வளவையும் வகுப்புத் தோழனின் தந்தையினுடைய கைப்பேசியைப் பயன்படுத்தி அவன் செய்ததால் குட்டு வெளிப்பட்டு, அவன் மாட்டிக்கொண்டான்.
பின்னர் காவல்துறையினர் அச்சிறுவனுக்கு அறிவுரை கூறி, தந்தையுடன் அவனை அனுப்பிவைத்தனர்.

