தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தூய்மை இயக்கம் 5.0: நாடு முழுவதும் 7 லட்சம் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி

2 mins read
4afb723f-f3f1-46ae-87b8-cd955326d79b
கடந்த 2014ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 145வது பிறந்த நாளையொட்டி, ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கினார் பிரதமர் மோடி. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ஏழு லட்சம் அரசு அலுவலகங்களில் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘தூய்மை 5.0’ என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பழைய பொருள்களைச் சேகரித்து விற்றதன் மூலம் நாட்டில் ரூ.3,296 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 145வது பிறந்த நாளையொட்டி, ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தைத் துவங்கினார் பிரதமர் மோடி.

திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பது, வீதிகளில் குப்பை கொட்டுவது உள்ளிட்ட அசுத்தமான பழக்கங்களில் இருந்து மக்கள் விடுபட்டு, நாட்டைத் தூய்மையாக வைத்திருக்கும் நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகமானது.

இதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை இந்தியா திட்டத்தைக் கடைப்பிடிப்பது தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, வெளிப்புறத் தூய்மை என்பதுடன் அரசு அலுவலகங்களுக்குள் நீண்ட காலமாகக் காணப்படும் காலாவதியான ஓட்டை உடைசல்களைக் கொண்ட பழைய பொருள்கள், வீணாகிப்போன காகிதக் கோப்புகள், பழைய மரச்சாமான்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ‘தூய்மை இந்தியா 5.0’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 7.22 லட்சம் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மூன்று மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய அரசின்கீழ் இயங்கும் 84 அமைச்சுகளைச் சார்ந்த மூத்த அமைச்சர்களும் 800 மூத்த அலுவலர்களும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே, பழைய பொருள்களை விற்றதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்ததுடன், அரசு அலுவலகங்களில் 696 லட்சம் சதுர அடி அளவுக்கு இடம் காலியாகி, அலுவலகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்