மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி: ரூ.5,100 கோடி வருவாய்

மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி: ரூ.5,100 கோடி வருவாய்

1 mins read
b1dbafe5-c053-414c-b58b-f6a4cc37c81e
‘தூய்மை மிஷன் 2.0’ திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: அப்ஸ்டாக்ஸ்

புதுடெல்லி: அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாகத் தேங்கிக்கிடந்த தேவையற்ற கழிவுப் பொருள்களை அகற்றி விற்பனை செய்ததன்மூலம் இந்திய அரசுக்கு ரூ.5,102 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

‘தூய்மை மிஷன் 2.0’ திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசுத்துறைகள், அமைச்சுகளில் பழைய கோப்புகள், பயன்படுத்த முடியாத இயந்திரங்கள், அலுவலகக் கழிவுகளால் கடுமையான இடநெருக்கடி நிலவி வந்தது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் 2021ஆம் ஆண்டு முதல் சிறப்புத் தூய்மை இயக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. கழிவுப் பொருள்களை ஏலம் விட்டதன்மூலம் ரூ.5,102.91 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 24.20 லட்சத்திற்கும் அதிகமான அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுமார் 1.80 கோடிக்கும் மேற்பட்ட (180.48 லட்சம்) பழைய கோப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையால் பல லட்சம் சதுர அடி அலுவலக இடம் பயன்பாட்டிற்காக மீட்கப்பட்டுள்ளது.

அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் கட்டத் தூய்மை இயக்கத்தில் மட்டும் 11.6 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.833.92 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஆறாம் கட்டச் சிறப்பு இயக்கம் வரும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளைக் கண்காணிக்க இணையத்தளத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகங்களை நவீனப்படுத்துவதுடன், ‘கழிவிலிருந்து செல்வம்’ (Waste to Wealth) முழக்கத்தின் மூலம் வருவாயையும் பெருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
அலுவலகம்கழிவுவிற்பனைதூய்மைமத்திய அரசு